திடீரென ஏதோ ஒரு விசித்திரமான உருவம் என் முன் தோன்றியது. அதற்கு என்னைப் போல் கைகள் இருந்தன. முகமும், உடலும் இருந்தன. ஆனால், இடுப்புக்குக் கீழ் மீனாக இருந்தது. ஓகோ! இதுதான் கடல் மனிதனா! சில நிமிடங்களில் பல கடல் மனிதர்கள் எங்கள் முன் தோன்றினர். எங்களையே அவர்கள் கண்கொட்டாமல் ஆச்சரியத்துடன் பார்த்தனர். என்ன அதிசயம்? பொதுவாக பால் போல் வெள்ளையாயிருந்த இமைக்காத அவர்களுடைய கண்கள் அடிக்கடி சிவப்பு, நீலம், பச்சை என்று நிறம் மாறிக்கொண்டே இருந்தன. நீளத் தலைமுடி தோளிலும், மார்பிலும் புரள, இடுப்புக்குக் கீழ் மீனின் செதில்கள் பளபளவென்ன மின்ன, வாலை அடிக்கடி வாள் போல் தண்ணீருக்குள் வீசிக்கொண்டே இருந்தனர். அதற்குள் தாத்தா லட்டுவையும் கூட்டுக்கொண்டு, ஏதோ நெருங்கிய உறவினர்களைப் பார்த்து சொந்தம் கொண்டாடுவதுபோல், கடல்மனிதர்களுடன் கைகுலுக்கச் சென்றார். டைனாசரஸ் சகோதரிகள் அவரை தடுத்தன. முதலில் கோவா அவர்களிடம் சென்று வணங்க, அவர்கள் பதிலுக்கு கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவன் சிப்பிகளினாலான மாலை அணிந்து கொண்டிருந்தான். அவன் முன்னே வந்து, “மனிதர்களை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கு அவர்களுடன் பகையேதுமில்லை. எங்கள் இனம் அழிந்தபிறகே மனிதர்கள் தோன்றினர்” என்றான். மற்றொருவன், “ஆனால், அநுநிர்வாவில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று கூறுகின்றனர். பேராசை பிடித்த அவர்கள் தாங்கள் காண்பதை எல்லாம் தனதாக்கிக் கொள்வர் என்றும் அறிகிறேன். அதனால் உங்களில் ஒருவர் மட்டுமே இங்கு இருக்கலாம். மற்றொருவர் சந்திக்கட்டும்” என்றான். |
|
|