ipad/iphonetopBanner

கதைகள்

கடலுக்கு அடியில் ஓர் உலகம்

ஆசிரியர்: அம்புலிமாமா | 21st Oct, 2009


உற்சாகமேயில்லாமல் ஒருவித மனக்கலக்கத்துடன் நான் சோர்வாக சாய்ந்து கொண்டிருந்தேன். ஆனால், தாத்தாவோ சிறிதும் கவலையோ, பதற்றமோ இல்லாமல் தாஜ்மகாலைப் பார்த்து ரசிக்கும் வெளிநாட்டுப் பயணிபோல், சுற்றுப்புற காட்சிகளை ரசித்துக் கொண்டு இருந்தார். இடையிடையே, சகபயணிகளையும் வெகுவாக ரசித்தார்.


“இதன் காதுகளைப் பாரேன்! முறம் மாதிரி இருக்கிறது! அடேயப்பா!” என்று சீன யானையின் பிரம்மாண்டமான காதுகளைத் தாத்தா தடவி கொடுத்ததைப் பார்க்க வினோதமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் ஒரு சிறு குழந்தையைப் போல் எப்படி அவரால் நடந்து கொள்ள முடிகிறது! யானை தன் காதுகளை விடாமல் ஆட்டிக் கொண்டேயிருந்தது. அதைப் பார்த்ததும் மகாபாரதம் தொலைக்காட்சி சீரியலில் திருதராஷ்டிரரின் இரு பக்கமும் நின்று கொண்டு, ஓயாமல் கைவலிக்க மயிலிறகு விசிறிகளை விசிறிக் கொண்டிருக்கும் சேடிப் பெண்களின் ஞாபகம் வந்தது. லட்டு மிகுந்த உற்சாகத்துடன் வாலை ஆட்டிக் கொண்டேயிருந்தது. அதை சீண்டலாமா என்று நான் எண்ணியபோது என் கவனத்தை பாரதியும், புஷ்பாவும் திசை திருப்பினர்.


இருவரும் அந்த வரிக்குதிரை கோவாவுடன் கிசுகிசுவென்று ஏதோ ரகசியம் பேசியதைக் கண்டு என் வயிற்றில் மறுபடியும் கலக்கம் ஏற்பட்டது. ரகசியம் பேசி முடித்தவுடன், பாரதி எங்களைப் பார்த்து, “கப்பலை மூழ்கடிக்கும் சமயம் வந்து விட்டது” என்று அறிவித்ததும் என் வயிற்றில் ஏராளமான பட்டுப் பூச்சிகள் துள்ளின. “கடலுக்கடியில் உள்ள பாதாள உலகில் உள்ள கடல் மனிதர்களை சந்தித்து, உங்களை அங்கே அழைத்துச் செல்வதைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும். கடல் மனிதர்கள் மிகவும் மரியாதைக்குரிய பிரஜைகள்! உருவத்தில் பாதி உங்களைப் போலிருந்தாலும், மனிதர்களின் தீய குணங்கள் எதுவும் அவர்களிடம் கிடையாது. அதனால் அவர்களிடம் நீங்கள் மரியாதையாக நடக்க வேண்டும்” என்றார்.


தொடர்புடைய கதைகள்

Customer Help Nos
BannerBanner