கிருதயுகம் கழிந்து துவாபரயுகம் வந்த போது ராட்சசர்கள் ஏராளமாகத் தோன்றி அட்டூழியங்களைச் செய்து பூமிக்கு பாரமானார்கள். அப்போது பூமாதேவி விஷ்ணுவிடம் போய் முறையிட அவரும் கிருஷ்ணாவதாரம் எடுத்து அவர்களை அழிப்பதாகக் கூறினார். உக்கிரசேனனின் தம்பியின் மகள் தேவகி. யதுவம்ச மன்னனான வாசுதேவர் அவளை மணந்து கொண்டார். அவர்களைக் கம்சன் ரதத்தில் ஓட்டிச் சென்ற போது ஒரு அசரீர வாக்கு தேவகியின் எட்டாவது குழந்தையால் கம்சன் மடிவான் எனக் கூறியது. கம்சன் உடனே தேவகியைக் கொல்லப் போகவே வாசுதேவர் குறுக்கிட்டு தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் அவனிடம் அவ்வப்போது கொடுத்து விடுவதாகக் கூறினார். அதுபோல அவர் அவளுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளைக் கொடுக்க கம்சன் அவற்றையெல்லாம் உடனுக்குஉடனேயே கொன்று வந்தான். தேவகி ஏழாவது முறை கர்ப்பவதிஆனாள். அவளது கருவில் விஷ்ணுவின் அம்சமான ஆதிசேஷன் குழந்தையாக இருந்தான். விஷ்ணு அந்த கர்ப்பத்தை தேவகியிடமிருந்து கோகுலத்திலுள்ள வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு மாற்றி விட்டார். பின்னர் மாயாதேவியிடம் அவள் கோகுலத்தில் நந்தகோபரின் மனைவியான யசோதையின் மகளாகப் பிறக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். இவ்விதமாக தேவகியின் ஏழாவது கர்ப்பம் தவறிப் போய்விட்டது. அவள் எட்டாவது தடவை கர்ப்பவதியனாதும் கம்சன் அவளையும் வாசுதேவரையும் சிறையில் அடைத்து விட்டான். |
|
|