இது கண்டு இராவணன் கோபம் கொண்டு பாதாள இலங்கையின் அதிபதியான மஹிராவணனிடம் இராமனையும் இலட்சுமணனையும் காளிதேவிக்குப் பலியிடும்படிக் கூறினான். தூங்கிக் கொண்டிருந்த இராமரையும் இலட்சுமணனையும் மஹிராவணன் தன் மாயாஜாலத்தால் பொம்மைகளாக்கித் தூக்கிக் கொண்டு பாதாள இலங்கைக்குச் சென்றான். அங்கு காளி கோயிலில் பலி கொடுக்க அவர்களை அவன் தயாராக வைத்திருந்தான். அனுமார் பாதாள இலங்கைக்குப் போய் வாசலைக்காக்கும் மத்சவல்லவனுடன் போர் புரியலானார். அப்போது சுவர்ச்சயா தேவி அங்கு வந்து அவர்கள் இருவரும் தந்தையும் மகனுமாக உறவு கொண்டவர்கள் எனக்கூறி சண்டையை நிறுத்தினாள். அனுமார் சிறு உருவில் காளி கோயிலுக்குள் சென்றார். அங்குள்ள இராமரையும் இலட்சுமணரையும் விடுவித்து தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தார். அவர்கள் இருவரும் மஹிராவணனுடன் போர் புரியலானார்கள். இராமரைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் சந்திரசேனையை மஹி ராவணன் சிறையில் அடைத்திருந்தான். அவளிடமிருந்து அனுமார் மஹிராவணன் உயிர் நிலை இரகசியத்தை அறிந்து கொண்டார். அதனை அவர் அழிக்கவே மஹிராவணன் இராமரின் அம்பினால் தாக்குண்டு இறந்து போனான். இராமர் சந்திரசேனைக்கு தத்துவ போதனை புரிந்து அவள் மறுபிறப்பில் விஷ்ணுவை அடைவாள் என ஆசீர்வதித்தார். |
|
|